முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது
முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22) மதியம் தனது கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.இதில் நாங்கள் விசாரித்து தீர்ப்பு வரும்வரை எவரையும் குற்றம் சாட்ட முடியாது.அத்துடன் புலனாய்வு துறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையின் அடிப்படையில் இத்தாக்குதல் சம்பந்தமாக தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இதில் வீணாக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை குற்றஞ்சாட்டுவது முறையல்ல. அவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
துரிதமாக இந்த விசாரணைகளை மேற்கொண்டு முஸ்லிம் மக்கள் இடத்தில் இருக்கின்ற ஐக்கியத்தை நாம் உருவாக்க வேண்டும். மீண்டும் உறவை அம்மக்களுடன் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன் கடந்த கால அரசாங்கங்கள் உரிய பாதுகாப்பினை மேற்கொள்ளாமை காரணமாகத் தான் இந்த வலிந்த தாக்குதல் நடப்பற்கு காரணமாக அமைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்
இதனால் பல மக்களின் உயிர்கள் இழக்கப்பட்டு ஒரு அமைதியற்ற சூழலில் வாழும் நிலையில் அனைவருக்கும் இந்த தாக்குதலால் ஏற்பட்டது.
ஆகவே உறவை இழந்த சொந்த பந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் இடத்தில் நாங்கள் ஒரு ஆறுதல் கூறி அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக பிரார்த்திக்கின்றோம் என கூறினார்.