அம்மா உணவகங்களில் இலவச உணவு!! -எடப்பாடி அறிவிப்பு-
அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளிலும் என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு சூடான, தரமான, சுவையான காலை டிபன் மற்றும் மதியம் 3 வகையான கலவை சாத வகைகள் அரசு நிர்ணயித்த மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் வசதி குறைவான ஏழை, எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அவர்கள் போதிய வருமானம் இன்றி உள்ளனர்.
எனவே அவர்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 11 அம்மா உணவகங்களிலும், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் காலை மற்றும் மதியம் வேளைகளில் உணவருந்தும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும்.
இதற்கான செலவை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.