SuperTopAds

ஊரடங்கு நேரத்தில் கதவை பூட்டிவிட்டு பாரவூர்தியில் ஏற்றப்படும் பொருட்கள்..! கிளிநொச்சி சதோசவில் நடப்பதென்ன? கிளிநொச்சி மாவட்ட செயலரே உங்கள் கவனத்திற்கு..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு நேரத்தில் கதவை பூட்டிவிட்டு பாரவூர்தியில் ஏற்றப்படும் பொருட்கள்..! கிளிநொச்சி சதோசவில் நடப்பதென்ன? கிளிநொச்சி மாவட்ட செயலரே உங்கள் கவனத்திற்கு..

கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென கூறி பெருமளவு பொருட்கள் கொள்வனவு  செய்ய அனுமதி வழங்கியது யார்? அந்த பொருட்களை கொள்வனவு செய்பவர் யார்? என கேள்வி எழப்பிய ஊடகவியலாளாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் உள்ள சதோச விற்பனை நிலையத்திற்குள் ஊடகவியலாளர் ஒருவர் நுழைந்துள்ளார். இதன்போது அங்கு பொருட்கள் பெருமளவில் பொதி களாக்கப்படும் நிலையில், சதோச விற்பனை நிலையத்திற்கு பின்புறமாக பாரவூர்தி ஒன்றும் நின்றுள்ளது. 

இதனையடுத்து ஊரடங்குவேளையில் இவ்வாறு பொருட்கள் அதிகளவில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன? அதனை கொள்வனவு செய்பவர்கள் யார்? என வினவியபோது மக்களுக்கு நிவாரணம் வழங்க பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாக அங்கிருந்தவர்கள் ஊடகவியலாளரிடம் கூறியுள்ளனர். 

இதனையடுத்து நிவாரணம் வழங்கவே பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், பெருமளவு பொருட்களை நிவாரணம் வழங்க கொள்வனவு செய்வதாயின் மாவட்ட செயலார் அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அனுமதி உள்ளதா?

என கேட்டபோது அங்கிருந்தவர்கள் ஊடகவியலாளர் மீது கடுமையாக முரண்பட்டிருக்கின்றனர். ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் பெருமளவு பொருட்கள் வர்த்தகர்களுக்கும், பதுக்கல் பேர்வழிகளுக்கும் இவ்வாறு விற்பனை செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளது. 

இதனை பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சதோச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டது வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவதற்காகும்.