கோவிட்-19: மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் என்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கை இப்போது இருப்பதை விட கடுமையாக நடைமுறைப்படுத்தினால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு தற்போது சீனாவில் இருந்து மருத்துவ பரிசோதனை கருவிகள் வந்து சேர்ந்திருப்பதால், நாடு முழுவதும் சோதனை அதிகரிக்கப்படுகிறது. கடுமையான சுவாச பிரச்சனை தொடர்பான அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்பட உள்ளது. நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
எனவே, கூடுதல் பரிசோதனைகள் செய்யும்போது, வைரஸ் உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தால், வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரசை கட்டுக்குள் வைப்பதற்கு சமூக விலகல் மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு ஆகும்.