கொரோனா அச்சத்திலிருந்து மீளாத சீனா
சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றிய வூஹான் நகரில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அறிகுறி இல்லாத கொரோனா தொற்றுகளால் இரண்டாவது பரவல் தொடங்குமோ என்ற அச்சத்திலேயே உள்ளனர்.
வூஹானில், இந்த வாரம் மக்களின் மனநிலை கொரானாவை வென்ற மகிழ்ச்சியில் இருந்தது. 76 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு மக்கள் வெளியே தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.
‘பீனிக்ஸ் பறவை போல, கொரோனா வைரஸ் ஊரடங்கின் இருட்டிலிருந்து, வசந்த காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது’ என அரசு ஆதரவு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் உள்ளது.
‘இதன் மூலம் இரண்டாவது பரவல் நடக்ககூடாது. இடைவிடாமல் கண்காணியுங்கள் என சீன அதிபர் ஜி ஜிங் பிங்’ உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தலைநகர் பீஜிங், ரஷ்ய எல்லை நகரமான சூய்பென்ஹி போன்ற பல நகரங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், வெளிநாட்டவர்கள் மீதான கண்காணிப்புகள் என தீவிர நடவடிக்கை தொடர்கிறது.
வூஹானில் கொரோனா வைரஸ் பூஜ்ஜிய நிலையை அடைந்துள்ளது. அதற்காக ஆபத்தும் பூஜ்ஜியம் என சொல்ல முடியாது. வேலைக்கு செல்பவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
பரிசோதனை முடிந்த நபர்களுக்கு, மொபைலில் க்யூஆர் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. பச்சை குறி பெற்றவர்கள் மட்டுமே வெளியே செல்லலாம்.
நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து இல்லாதது, மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் மேம்படாதது (Herd Immunity) போன்ற காரணங்களால், நோய் மீண்டும் தலைதூக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஹாங்காங்கில் தடைகளை தளர்த்திய பின்னர், வைரஸ் தொற்று பரவல் அதிகமானது. அதில் பலர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். உடனடியாக மீண்டும் தடையை அறிமுகப்படுத்தினர். சமூக விலகலை கடைப்பிடித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தியுள்ளனர்.
வைரஸை திறம்பட கட்டுப்படுத்தியுள்ள தென் கொரியாவில், புதிய வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்த போதும், ஹாங்காங் எடுத்த ரிஸ்கை தென்கொரியா எடுக்கவில்லை.
‘அதிகம் பேருக்கு வைரஸ் பரவும் அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் முயற்சியை தொடர வேண்டும்’ என அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.