கொரோனா தொற்றியவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டார்
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுள்ள ஒருவர் முதன்முறையாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று காசிம் ஆலிம் வீதி அருகில் வசித்து வந்த சுமார் 56 வயது மதிக்கத்தக்க குறித்த நபருக்கே கொரோனாவைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை(8) கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது குறித்த நோய் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சைக்காக வெலிக்கந்தை புனாணை பகுதியில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.மேலும் குறித்த நபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று திரும்பியதாகவும் 14 நாட்கள் கழிந்த பின்னரே இவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வீடு திரும்பிய நிலையில் அப்பகுதியில் உள்ள பலருடன் பழகி இருப்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் 9 பேரை தற்போது அடையாளம் கண்டு குறித்த பகுதியை தனிமைப்படுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.