வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க வேண்டும்.
வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும் நபர்கள் மற்றும் கோவிட் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து யாரும் வசித்தால் சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் செவ்வாய்க்கிழமை(7) நண்பகல் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
கோவிட் 19 தொற்று நோய் கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினை முன்னெடுத்து வருகின்றது.பொத்துவில்,திருக்கோவில் ,நிந்தவூர், சம்மாந்துறை வைத்திசாலை உட்பட சுகாதார பணிமனை சேவை பகுதிக்குட்பட்ட 15வைத்தியசாலைகளுக்கும், 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் இதற்காக எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளன.
இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் பரவி விட கூடாது என்பதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.எனவே பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்புப்புக்களை வழங்க வேண்டும் முக்கியமாக பொது மக்கள் சமுக இடைவெளி, கைகழுவுதல் போன்ற விடயங்களை முறையாக பேண வேண்டும் .கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பகுதிகளில் உள்ள சுற்றாடல் பகுதிகளில் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமிகளை அழிக்க கூடிய இரசாயன பாதார்தங்கள் தெளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலையில் 750 தனிமைப்படுத்தல் நபர்கள் உட்பட அவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களமாக சுமார் 2000 பேர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ள எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை எனும் ஆரோக்கியமான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஆயினும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த சுமார் 9058 பேரை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் விடுவித்ததாகவும் பாதுகாப்பற்ற மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வருகை தந்த உள்ளுர்வாசிகளையும் தனிமைப்படுத்தியதாகவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கூறினார்.
விரைவில் பரவக்கூடிய வகையிலும் , அதிக பாதிப்பை தரக்கூடியதாகவும் அதிக ஆபத்தாகவும் கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. நீர்பீடனசக்தி குறைந்தவர்களையும் ,சுவாச பிரச்சனை உள்ளளோரையும் விரைவில் ஆட்கொண்டு தாக்கி வருகின்றது என தெரிவித்தார்.