அமெரிக்காவில் கொரோனா பலி அதிகரிக்கும்!! -டிரம்ப் அதிர்ச்சி தகவல்-
அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழப்பர்வகளின் தொகை அடுத்த 2 வாரங்களில் உச்சத்தை அடையலாம் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமைல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2484 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அமெரிக்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் வைரஸ் தாக்கம் மற்றும் உயிரிழப்பு உச்சத்தை அடையலாம் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும்.
உயிரிழப்பை 1 லட்சத்திற்குள் கட்டுப்படுத்தினாலே பெரிய விசயம். வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். சமூக விலகல் உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது, ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதிக்கு மேல் விடிவு பிறக்கும்’ என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை என்றால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்று அதிபரிடம் பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.