முல்லைத்தீவில் 14 மீனவர்கள் கைது..! 4 ஆயிரத்து 7 கிலோ மீன் பறிமுதல், அதில் 2 ஆயிரத்து 51 கிலோ அழிக்கப்பட்டது, மிகுதி ஏலத்தில் விற்பனை..
முல்லைத்தீவு- மாத்தளன் பகுதியில் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 4 ஆயிரத்து 7 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கு ம் நிலையில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றுவந்தபோது சுமார் 14 மீனவர்கள் 4 ஆயிரத்து 7 கிலோ மீனை பிடித்திருந்தனர்.
இதனை அறிந்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறையை பயன்படுத்தியே இவ்வளவு மீன் பிடிக்க முடியும் என கூறியதையடுத்து மீனவர்களுக்கும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் தாக்கம் மூண்டது.
இதனையடுத்து பொலிஸார், கடற்படையினர், இராணுவத்தினர் சம்பவ இடத்திற்குள் நுழைந்தனர். இதனையடுத்து 14 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது 14 மீனவர்களையும் தலா 1 லட்சம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி மே மாதம் 21ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட மீனில் சிதைவடைந்திருந்த 2 ஆயிரத்து 51 கிலோ மீனை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன்,
மிகுதியை ஏலத்தில் விற்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.