SuperTopAds

கல்முனையில் ஊரடங்கு நிறைவடையும் தருவாயில் அதிக விலைக்கு தரமற்ற முககவசம் விற்பனை

ஆசிரியர் - Editor IV
கல்முனையில் ஊரடங்கு நிறைவடையும் தருவாயில் அதிக விலைக்கு தரமற்ற முககவசம் விற்பனை

கல்முனையில் ஊரடங்கு நிறைவடையும் தருவாயில்  அதிக விலைக்கு தரமற்ற முககவசம்  விற்பனை செய்த செயற்பாடு தடுக்கப்பட்டது.

திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல்  மதியம் 2 மணி வரை ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியவசியமான பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஊரடங்கு சட்டம் நிறைவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில்  மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவர் தரமற்ற 5 எண்ணிக்கையான முகக்கவசங்களை 100 ரூபா முதல் கொண்டு 300 ரூபா என்று கூவி விற்பனை செய்ய முயன்றார்.

இந்நிலையில் அவ்வீதியால் பயணம் செய்த ஊடகவியலாளர் குழு அவ்விடத்தில் இறங்கி குறித்த தரமற்ற முககவசத்தை விற்பனை  செய்த நபரிடம் உரையாடியது.

இதன் போது அந்நபர் தான் விற்கின்ற முகக்கவசத்தை அணியாததுடன் தரமற்ற முககவசத்தை விற்பனை செய்ததும் ஊடகவியலாளர் குழுவினரால் கண்டறியப்பட்டது.

உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இராணுவத்தினர் சந்தேகத்திற்கிடமான குறித்த நபரை விசாரணை மேற்கொண்ட நிலையில் அவ்விடத்தில் இருந்து அவர் அகன்று சென்றதை அவதானிக்க முடிந்தது.

இதே போன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள முககவசத்தின் விலையை உள்ளுரீல் தயாரித்ததாக கூறி அதிக விலையில்  சந்தேக நபர்கள் சிலர் தரமற்ற பொருட்களினால் தயாரிக்கப்பட்ட முககவசங்களை விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.