கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அம்பாரை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
உலகம் பூராகவும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லையென்றும் இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாத்திரம் அமுல்படுத்துமாறும் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் என்ற வகையில் மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேவையற்ற வகையில் தாம் நினைத்தவாறு வர்த்தக நிலையங்களை மூட வேண்டாம் என்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்க கோரிக்கை விடுத்தார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை(18) மாலை வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பாக நாட்டினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வீ.ஜெகதீசன், அப்துல் லத்தீப் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தின, மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள், 24 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜே.சீ.கமகே, அம்பாறை வைத்தியசாலைப் பணிப்பாளர் உபுல் விஜேநாயக்க, வர்த்தக சங்க பிரதிநிதிகள் சுகாதார உயர் அதிகாரிகள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரச அதிபர்,
பண்டாரநாயக்க தவறான பிரச்சாரங்கள் ஊடாக செயற்பட்டு மக்களை அச்சமடையச் செய்ய வேண்டாம் அதேபொல் சமூகத்திலிருந்து இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாத்திரம் அமுல் படுத்துமாறும் வர்த்தகர்கள் தாம் நினைத்தவாறு வர்த்தக நிலையங்களை மூடவேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், மாவட்டத்தில் வாழும் மக்களின் தேவைக்கேற்ப பொருட்களை களஞ்சியப்படுத்திக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.