SuperTopAds

திகாமடுல்ல மாவட்டத்தில் இன்று வரை 57 வேட்புமனுக்கள் கையளிப்பு

ஆசிரியர் - Editor IV
திகாமடுல்ல மாவட்டத்தில் இன்று வரை 57 வேட்புமனுக்கள் கையளிப்பு

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக 57 வேட்பு மனுக்கள் அம்பாரை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் நிலையத்தில் திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென   வியாழக்கிழமை (19) 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய காங்கிரஸை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, தேசிய மக்கள் சக்தி, அபே ஜனபல பக்சய, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.டி.பி உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன.

நேற்றைய தினம் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் போது 8 கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாரை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10 பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து போட்டியிடுவர்.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று 19ஆம் திகதி பகல் 12 மணியுடன் நிறைவடையும்.

அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.