நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்!! -சுற்றுலா பயணிகளுக்கு இஸ்ரேல் உத்தரவு-
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா வந்த அனைவரும் உடனடியாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கு உலக நாடுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்தவண்ணம் உள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், பல்வேறு நிறுவனங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
கூடிய விரைவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.