SuperTopAds

ஈரானில் இருந்து 234 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!

ஆசிரியர் - Editor III
ஈரானில் இருந்து 234 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!

கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 103 இந்திய யாத்திரீகர்கள் மற்றும் 131 மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை  வந்தடைந்தனர். 

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 97 பேர் நேற்று உயிரிழந்ததால் இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஈரான் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்களை தரிசிக்கவும் அந்நாட்டில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் பயிலவும் சென்ற சுமார் 6 ஆயிரம் இந்தியர்கள் கொரோனா பீதிக்கு இடையில் அங்கு சிக்கித் தவித்தனர்.

அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்தியா அனுப்பி வைத்த ராணுவ விமானம் மூலம் கொரோனா அச்சத்துக்கு இடையில் அங்கு தவித்த 58 யாத்ரீகர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் 44 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் அடுத்தக்கட்டமாக 103 யாத்திரீகர்கள் மற்றும் 131 மாணவர்கள் என 234 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தாக்கத்துக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.