SuperTopAds

இத்தாலியில் தவிக்கும் 55 தமிழக மாணவர்கள்!!

ஆசிரியர் - Editor III
இத்தாலியில் தவிக்கும் 55 தமிழக மாணவர்கள்!!

இத்தாலியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 55 தமிழக மாணவர்கள் கொரோனா குறித்த தகுதி சான்றிதழ் இல்லாமல் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் காரணமாக 1,19,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் உள்ள மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் தமிழக மாணவர்கள் 55 பேர் தவித்து வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா குறித்த தகுதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் அவர்கள் தவித்து வருவதாகவும் தங்களை மீட்கும்படி தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அங்குள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.