கொரோனா அச்சம்: எஞ்சிய நாடுகள் சாதாரணமாக எடுக்க வேண்டாம் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முதன்மை மருத்துவர்!
எகிறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் இத்தாலியின் சுகாதார அமைப்பு மொத்தமாக சீர்குலையும் எனவும், இந்த விவகாரத்தை எஞ்சிய நாடுகள் சாதாரணமாக எடுக்க வேண்டாம் எனவும் முக்கிய மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது ஐரோப்பிய நாடான இத்தாலி. இங்கு இதுவரை 5,883 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
589 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 233 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நோய் தொற்று தொடர்பில் இத்தாலியின் அனைத்து பிராந்தியத்திலும் பீதி நீடித்து வருவதாகவும், மொத்த மருத்துவமனைகளிலும் பரிசோதனைக்காக குவியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பிரபல மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இத்தாலியில் புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் முன்னணி மருத்துவர்களில் ஒருவரான அவர், உண்மையில் தற்போதைய சூழலை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், நாட்டு மக்களின் நிலை பயத்தை ஏற்படுத்துவதாகவும், எஞ்சிய நாட்டு சுகாதாரத் துறைகொரோனா விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களில் பத்து சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு பெரும் அழுத்தத்தை செலுத்துகின்றனர் என்று இத்தாலிய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, மிலன் நகரில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதால், வேறு நோயாளிகளும் அவஸ்தைக்கு உள்ளாகும் நிலை எழுந்துள்ளது என்கிறார் ஒரு மருத்துவர்.
இந்த நிலையிலேயே இத்தாலியின் முக்கிய பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 16 மில்லியன் மக்கள் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.