SuperTopAds

உயிர் கொல்லி கொரோனா அச்சுறுத்தல்!! -300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு-

ஆசிரியர் - Editor III
உயிர் கொல்லி கொரோனா அச்சுறுத்தல்!! -300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு-

உலகை அச்சுறுத்தும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக 290.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெருக்கடி நிலையின் போது பாடசாலைகள் மூடப்படுகின்றமை புதிய விடயமல்ல என்ற போதிலும், தற்போது முன்னொரு போதும் இல்லாத வேகத்தில் பாடசாலைகள் மூடப்படுவதாக யுனெஸ்கோவின் தலைவர் ஆட்ரி ஆசோலே தெரிவித்துள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் கல்வி கற்பதற்கான உரிமை பாதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோன வைரஸ் தொடர்ந்து பரவுவதன் காரணமாக இத்தாலி 15ஆம் திகதி வரை பாடசாலைகளிற்கும் பல்கலைகழகங்களிற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானும் அனைத்து பாடசாலைகளையும் மூடியுள்ள அதேவேளை, 92 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் ஈரானும் பாடசாலைகளை முற்றாக மூடியுள்ளது.