நான்காவது ஆண்டைத் தொட்ட போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது கிளிநொச்சி மாவட்ட உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நான்காம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அருவலகத்துக்கு முன்னால், இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போராட்டக்காரர்கள், வாகனங்களிலும் ட்ரக்டர்களிலும், தங்களது பிள்ளைகளை இராணுவத்தினர் ஏற்றிச் சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம், 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் இன்னமும் எங்கு உள்ளனர் என்று தெரியவில்லையெனவும் கூறினர்.
அவர்கள் எங்கேயோ மறைக்கப்பட்டு உள்ளார்களெனவும், அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் உள்ளதாகவும் கூறினார்.
ஓ. எம். பி அலுவலகத்தில் முக்கிய சாட்சிகளுடனான ஆதாரத்தை வழங்கியதாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், அந்த ஆதாரங்களைக் கொண்டு அவ்வலுவலகத்தினர்களால், தமது உறவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனவும் கூறினர்.