ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கிய இந்தியர் எண்ணிக்கை 8 ஆனது
பயணிகளிடையே கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜப்பானை சேர்ந்த டைமண்ட் சொகுசு கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் 2 வாரங்களுக்கும் மேலாக அந்த நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பயணிகள், ஊழியர்கள் என 3,700-க்கும் அதிகமானோர் பயணித்த அந்த கப்பலில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கப்பலில் 132 ஊழியர்கள், 6 பயணிகள் என இந்தியர்கள் 138 பேரும் உள்ளனர். இதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
தற்போது மேலும் ஒரு இந்திய ஊழியருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இதன் மூலம் ஜப்பான் கப்பலில் வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பயணிகளை கப்பலில் இருந்து வெளியேற்றும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.