சிறையில் வேண்டுமென்றே தன்னை காயப்படுத்திக்கொண்ட நிர்பயா வழக்கு குற்றவாளி!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவன் சிறையில் இருந்த சுவற்றில் தனக்கு தானே வேகமாக மோதி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012 ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முகேஷ், பவன், அக்சய் மற்றும் வினய் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூன்று முறை இவர்களின் தண்டனை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இறுதியாக மார்ச் 3ஆம் திகதி காலை 6 மணிக்கு குற்றவாளிகளை தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய செல்லுக்குள் இருந்த சுவற்றில் தனக்குத்தானே வேகமாக மோதி காயமாக்கி கொண்டதாக சிறை அதிகாரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும், சிறு காயமே ஏற்பட்டதாகவும் வினய்யை சிறை அதிகாரி தடுத்து நிறுத்தி சிகிச்சை அளித்தாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக வினய் சர்மா திஹார் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக அவன் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவன் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.