55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்..! கிளிநொச்சியில் சம்பவம்..
கிளிநொச்சி - அக்கராயனில் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த உரிமையாளர் ஆலயத்தை இடித்து அழித்துள்ளார்.
அக்கராயனில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குறித்த ஆலயம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்தன. ஆலயத்தின் உரிமையாளர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற கட்டட ஒப்பந்தக்காரரிடம் 55 இலட்சம் ரூபா நிதியை வழங்கி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
ஆலயத்தின் உரிமையாளர் கனடாவிலிருந்து அக்கராயனுக்கு வந்து ஆலயத்தின் கட்டுமானங்களைப் பார்வையிட்ட போது வழங்கப்பட்ட பணத்திற்கேற்ப ஆலயக் கட்டடம் அமைக்கப்படாததாலும், ஆலய கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதன் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலயம் முழுமை பெற்றாலும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வகையில் உள்ளதால் ஆலயத்தினை இடித்துள்ளார்.
இது குறித்து ஆலயத்தின் உரிமையாளரான நாகேந்திரம் தனபாலசிங்கம் தெரிவிக்கையில், கனடாவில் நான் ஐந்து ஆண்டுகளாக உழைத்து அனுப்பிய பணத்திற்கு உரிய முறையில் ஆலயம் அமைக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஆலயம் உடைந்து விழக்கூடிய நிலைமை காணப்பட்டதன் காரணமாகவே ஆலயத்தை இடித்ததாகவும், தன்னிடம் பணம் பெற்றவர் ஏமாற்றி விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஆலயம் அமைப்பதற்கு பணத்தினைப் பெற்றவர் துணுக்காயின் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆலயம் அமைப்பதில் மோசடி மேற்கொண்டுள்ளதாக பலராலும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.