தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!! -இலட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள்-
தஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இக் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குடமுழுக்கு திருப்பணிகள் மும்முரமாக நடந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த முறை யாகசாலை கோவில் வளாகத்தில் வைக்காமல் பாதுகாப்பு கருதி அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டது. அங்கு 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டது. அதில் 110 குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டன.
யாகசாலை பந்தலில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு கடந்த 27 ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.