சீனா நாட்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பலி!! -கொரோனாவே காரணம்-
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 304 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார முகமை அறிவித்துள்ள நிலையில் இந்தியாவிலும் இந்நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.
சீனாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டு, இந்நோய் தீவிரமடைந்த வுகான் பகுதியை சேர்ந்த சுமார் 44 வயது மதிக்கத்தக்க அந்நபர் 38 வயது சீனப் பெண்ணுடன் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவுக்கு வந்துள்ளார்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இருவருக்குமே கொரோனா வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தென்பட்டதால் மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவருடன் வந்த சீனப்பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிலிப்பைன்ஸ் அரசின் சுகாரத்துறை உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
உலகளாவிய அளவில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவுக்கு வெளியே அந்நிய நாட்டில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.