குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம்!! -மர்ம நபர் சுட்டதில் ஒருவர் காயம்-
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் புகுந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. அந்த வகையில், டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாக சென்றனர்.
அப்போது துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர், மாணவர்கள் கூட்டத்தை நோக்கி சுட்டார். இதில், மாணவர் ஒருவர் காயம் அடைந்தார்.
காயம் அடைந்த மாணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் நபரை, பிடித்த காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.