அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்பு!
அவுஸ்திரேலியாவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நடேசலிங்கம் - பிரியா குடும்பம் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த தம்பதியினரின் மூத்த மகள் கோபிகா, ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்புடன் பாலர் பாடசாலைக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், நடேசலிங்கம் - பிரியா தம்பதியினர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக தெரிவித்து, கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு. இந்த நிலையில் The Gladstone Observer பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள அவர்களுடைய குடும்ப நண்பர் ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ், திங்கட்கிழமையிலிருந்து பாடசாலை ஆரம்பிக்கின்றது. இதனால் கோபிகா மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறியுள்ளார். சிறுமி பாலர் பாடசாலைக்கு செல்லும்போது, அவருக்கு ஆயுதமேந்திய காவலர்களால் சூழப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
அத்துடன், பெற்றோர் சார்பில் ஒருவர் மட்டுமே உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அவருடைய தந்தை நடேசலிங்கம் செல்ல உள்ளார். கோபிகாவின் தாயார் பிரியா, சிறுமியின் முதல் நாள் பாடசாலை பற்றி பெரிதும் கவலைகளை கொண்டிருந்தார். ஆனால் தற்போது ஒரு பாதுகாப்புடன் பாடசாலை செல்வதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறியுள்ளார். இதேவேளை, இந்த குடும்பம் நாடு கடத்தப்படுவது பற்றிய வழக்கு எதிர்வரும் 21 மற்றும் 25 திகதிகளில் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.