மக்கள் எழுச்சியால் முடங்கியது முல்லைத்தீவு..! பதறியடித்து கூடிய அரச அதிகாாிகள்..
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் பிரச்சனைக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை அடுத்து தற்காலிக தீர்வு கிடைக்க பெற்றறுள்ளது. இன்றையதினம் முல்லைத்தீவு நகரில்
அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் இல்லாத நிலையினை நீக்குமாறு கோரி முல்லைத்தீவு நகர மற்றும் கரையோர மக்கள் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை
முன்னெடுத்து பின்னர் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதன்காரணமாக உடனடியாக போராடத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் வருகைதந்துகொண்டிருப்பதால் அவருடன் பேசி முடிவுகளை பெறுவோம் என வாக்குறுதி வழங்கிய போதிலும்
இன்றையதினமே வைத்தியர் குறித்த வைத்தியசாலைக்கு நியமிக்க படவேண்டும் இல்லையேல் தொடர்போராட்டமாக இங்கே அமர்ந்திருந்து போராடுவோம் என மக்கள் உறுதியாக தெரிவித்த நிலையில் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.
உடனடியாகவே போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் மக்களுடன் கலந்துரையாடும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் மற்றும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கஜன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் இறுதியில் ஏற்கனவே பிரதியீடு இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியர் உடனடியாக மீள நியமிக்கபடுவார் என்றும் 24 மணித்தியால சேவையை வழங்கும் வகையில் மேலும் ஒருவைத்தியர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலிருந்து
வரவழைக்கப்பட்டு நியமிக்கப்படுவார் என்றும் இந்த இரண்டு நியமனங்களும் உடனடியாகவே வழங்கப்படும் என்றும் மாசிமாதம் நிரந்தர வைத்தியர்கள் நியமனம் இடம்பெறும் வரை இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக செயற்படுத்தப்படும் எனவும்
குறித்த பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து வைத்தியசாலை அபிவிருத்தி குழு ஒன்றறும் அமைக்கப்படும் எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனால் உறுதிமொழி வழங்கப்பட்டது.
இதனையடுத்து மக்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததை அடுத்து மக்களின் தொடர்போராட்டம் கைவிடப்பட்டது . மக்களின் இந்த போராட்டம் காரணமாக முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள்,
பொதுச்சந்தை அனைத்தும் மூடபட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டது மேலும் கடற்தொழிலாளர்கள் எவரும் கடலுக்கு செல்லவில்லை இதனால் முல்லைத்தீவு நகரம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.