வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பிடியாணை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்..!
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா்களான து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழங்கு எதிா்வரும் மே மாதம் 18ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகாத நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட து.ரவிகரன் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், 2018பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற அவர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.
இதேவேளை எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி வழக்கினை ஒத்திவைத்து பின்னர் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக முன்னிலையாகி பிணையில் வெளிவந்தார்.
இவ்வாறாக இருவர் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், 27.01.2020 இன்றைய தினமும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றன.
இந் நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் சமூகம் தராத நிலையில் அவருக்கு மன்று பிடியாணை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.