கொரோனா வைரஸ் தாண்டவம் 41 பேர் பலி!! -1,200 பேர் வைத்தியசாலையில்-
வுகானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தாக்கத்திற்கு 1,200க்கும் மேற்பட்டோர் உள்ளாகியுள்ள அதே வேளை பலியானோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் கண்டறியப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் (2019-nCoV) இதுவரை சுமார் 1,200க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. வுஹான் நகரின் மார்க்கெட் ஒன்றில் பாம்புகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹான் உள்ளிட்ட 14 நகரங்கள் லாக்டவுன் செய்யப்பட்டு தனித்தீவுகளாக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களுக்கான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கியமான பண்டிகையான புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது சீன அரசு. முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் வுஹான் நகரில் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை ஒன்று புதிதாக கட்டமைத்து வரப்படுகிறது. இங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.