4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை!! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-
புதிதாக நடமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்வில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே திருத்தம் கொண்டுவரப்பட்டது. என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமில்லை.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சி.ஏ.ஏ பற்றி பேசுவோர் அகதிகள் முகாம் பற்றி பேசுவதில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்றார்.