தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி!

ஆசிரியர் - Admin
தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி!

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக கைதான 3 பயங்கரவாதிகள் ‘கியூ’ பிரிவு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் ஆகிய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் 3 பேரும் தலைமறைவாகினர். தேசிய புலனாய்வுத்துறை, மத்திய உளவுத்துறை மற்றும் தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.     

டெல்லியில் கைது

இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி டெல்லியில் துப்பாக்கிகளுடன் காஜா மொய்தீனும், சையது அலி நவாசும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரிடம் சிக்கினர். அவர்களுடன் அப்துல் சமத் என்ற பயங்கரவாதியும் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் வழங்கி அடைக்கலம் கொடுத்து உதவிய முகமது ஹனீப் கான், இம்ரான்கான், முகமது சையத் ஆகிய 3 பயங்கரவாதிகளை தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூருவில் கைதான 3 பயங்கரவாதிகளும் கடந்த 10-ந்தேதி சென்னை அழைத்து வரப்பட்டனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ‘கியூ’ போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 3 பயங்கரவாதிகளையும் ரகசிய இடத்தில் வைத்து இரவு-பகலாக ‘கியூ’ போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பயங்கரவாதிகள் 3 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

சதித்திட்டம்

தற்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘பெங்களூருவை சேர்ந்த மெகபூர் பாஷா (தற்போது கைதாகி உள்ளார்) எங்களை பயங்கரவாத பாதைக்கு அழைத்து வந்தார். அவரது ஆலோசனை பேரில் ஹல்ஹந்த் என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினோம். குடியரசு தின விழாவை சீர்குலைக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தோம். இதற்காக நேபாள தலைநகர் காட்மாண்டுவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களுடன் பயிற்சி பெற்றோம்.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், டெல்லி, குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதித்திட்டம் வகுக்கப்பட்டது’ என்று கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹல்ஹந்த் அமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு