SuperTopAds

அமெரிக்கா செய்தது கோழைத்தனமான செயல் - ஈரான் குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Admin
அமெரிக்கா செய்தது கோழைத்தனமான செயல் - ஈரான் குற்றச்சாட்டு!

காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல் எனவும், அவரை போர்க்களத்தில் எதிர்க்க துணிவில்லாததால் அவசரப்பட்டு அமெரிக்கா கொன்று விட்டதாகவும் ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி குற்றம் சாட்டினார். அமெரிக்கா-ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கடந்த 3-ந் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி அமெரிக்கா கொன்றது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் மோதலால் வளைகுடா பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் மூத்த மத தலைவரான அயத்துல்லா அலி காமெனி 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக தலைநகர் டெஹ்ரானில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினார். இதில் உரையாற்றும்போது அமெரிக்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த தளபதியாக காசிம் சுலைமானி இருந்தார். பல்வேறு நாடுகளின் மக்களும் அவரை அங்கீகரித்து இருந்தனர். ஈரானியர்களும், பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்களும் அவரை புகழ்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகளை எரித்து எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். அவரது இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று இஸ்லாமிய குடியரசுக்கு மீண்டும் ஒருமுறை தங்கள் விசுவாசத்தை காட்டி இருக்கின்றனர். இது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகும்.

சுலைமானியை போர்க்களத்தில் எதிர்கொள்வதற்கு அமெரிக்கர்களுக்கு துணிவில்லை. எனவே அவசர அவசரமாக அவரை கொன்று விட்டனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படை நடத்திய ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் அமெரிக்காவின் எடுபிடிகளாகத்தான் இருக்கின்றன. அணுசக்தி பேச்சுவார்த்தையில் இந்த ஐரோப்பிய நாடுகளை ஈரான் நம்பக்கூடாது. அவர்களது பேச்சுவார்த்தைகள் அனைத்தும் காலத்துக்கு ஏற்றவாறு மாறுபடும்.

எனினும் நாட்டின் அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவை தவிர பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் கவனம் தேவை. உக்ரைன் விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈரான் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தின் வீரியத்தை குறைக்க, விமானம் விழுந்த சம்பவத்தை ஈரானின் எதிரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அயத்துல்லா அலி காமெனி கூறினார்.

ஈரான் மத தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அவர்களது (ஈரான்) பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அவர்களின் மக்கள் துன்பப்படுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் அவர் (அயத்துல்லா) தனது வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை அமெரிக்காவின் எடுபிடிகள் என கூறியிருப்பது தவறு எனவும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.