உக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை பகுப்பாய்விற்கு அனுப்புமாறு கனடா வலியுறுத்தல்!
ஈரானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக பிரான்சிற்கு அனுப்புமாறு கனடா வலியுறுத்தியுள்ளது. ஒட்டாவா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்த கனேடியர்களின் சடலங்களை கனடாவுக்கு அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார். மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ள கறுப்புப் பெட்டிகளின் தரவுகளை கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஒருசில நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன், சேதமடைந்த கறுப்புப் பெட்டிகளை ஆய்வு செய்யும் தொழிநுட்பமோ அல்லது நிபுணத்துவம் கொண்டவர்களோ ஈரானில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, கறுப்புப் பெட்டியை பிரான்ஸிற்கு அனுப்பும் தீர்மானத்தை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக் கொள்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானதாக ஈரான் ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், பின்னர் மனித தவறு காரணமாக தங்களது ஏவுகணையே விமானத்தை தாக்கியதாக ஈரான் ஒப்புக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன், ஈரானுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென அமெரிக்காவும், கனடாவும் கோரி வருகின்றன. இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.