SuperTopAds

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட மறுக்கும் டெல்லி அரசு!

ஆசிரியர் - Admin
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட மறுக்கும் டெல்லி அரசு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் திஹார் சிறையில் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 

குற்றவாளிகளுக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை காட்டி தன்னுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு செய்துள்ளான்.

இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தாலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதிகளையும் டெல்லி அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவரங்களை விசாரணை நீதிமன்றத்தை அணுகி எடுத்துரைக்குமாறு கூறிவிட்ட உயர்நீதிமன்றம், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டை ரத்து செய்ய மறுத்துவிட்டது.