இரதமேறி அருள்பாலித்த ஏழாலை வசந்தநாகபூசணி:ஒரு சிறப்புப் பார்வை (VIDEO)

ஆசிரியர் - Admin
இரதமேறி அருள்பாலித்த ஏழாலை வசந்தநாகபூசணி:ஒரு சிறப்புப் பார்வை (VIDEO)

யாழ். ஏழாலை தெற்கு வசந்தபுரம் களபாவோடை வசந்தநாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்  இரதோற்சவம் இன்று   செவ்வாய்க்கிழமை(30) பக்திபூர்வமாக இடம்பெற்றது. வசந்தநாகபூசணி அம்பாளின் வருடாந்த இரதோற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தது.

காலை அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதுடன் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், நாகபூஷணி அம்பாள் ஆகிய தெய்வங்கள் உள்வீதி எழுந்தருளி உள் வீதியில் மெல்ல மெல்ல அசைந்தாடி வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து முற்பகல்- 10.30 மணியளவில் விநாயகப் பெருமான் சிறிய தேரிலும்,  நாகபூஷணி அம்பாள் பிரதான தேரிலும் ஆரோகணம் செய்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்- 11 மணியளவில் அம்பாளின் பிரதான இரத வடத்தை  ஆண் அடியவர்கள் ஒரு புறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் தொட்டிழுக்க  இரத பவனி ஆரம்பமாகியது. மங்கள வாத்தியங்கள் மற்றும் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க அம்பாள் வீதி வலம் வந்த திருக்காட்சி அற்புத பேரருள் நிறைந்த அழகுக் காட்சி.

இதன் போது ஆண் அடியவர்கள் பறவைக்காவடிகள், செதில்காவடிகள் முதலான காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணம் மேற்கொண்டும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நேர்த்தியுடன் நிறைவேற்றினர். தேர் பவனியின் பின்னே பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பண்ணுடன் ஓதியவாறு வலம் வந்தனர். தேர்பவனி வலம் வருகையில் முன்னே பல எண்ணிக்கையான காவடிகள் அணிவகுத்து வந்த காட்சி அருமையிலும் அருமை.

முற்பகல்-11.45 மணியளவில் இரு இரதங்களும் இருப்பிடத்தை வந்தடைந்தன. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானும், அம்பாளும் பச்சை சாத்தப்பட்டு இரத அவரோகணம் நடைபெற்றது. 

அம்பாளின் இரத பவனியில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். சின்மயாமிஷன் நிறுவனத் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம்  உட்பட யாழ். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருந்தொகையான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

Radio
×