SuperTopAds

ரூ.6000 கோடி செலவில் நிலத்தடி நீரை மேம்படுத்த திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

ஆசிரியர் - Admin
ரூ.6000 கோடி செலவில் நிலத்தடி நீரை மேம்படுத்த திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள நாடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் விவசாய முறைக்கு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று பெயரிடப்பட்டுள்ள அடல் நிலத்தடி நீர் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், அரியானா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மராட்டியம், உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8350 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 6000 கோடி ரூபாய் செலவில் திட்டம் அமலாக்கப்படுகிறது. அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தற்போது தொடங்கப்பட்ட திட்டங்கள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை நல்ல நிலைக்கு மாற்றும் என்றார். அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தண்ணீர் பிரச்னையை நாடு எதிர்கொள்வதை மறுக்க முடியாது என்ற அவர், குடிநீர் பிரச்னையை சமாளிக்க, நாடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் இப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறிய மோடி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்,. இதில், பெண்களை பங்கேற்க வைப்பது முக்கியமானதாகும் என்று அவர் கூறினார்.

நீர் சேமிப்பு திட்டங்களில், ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்க வேண்டும் என்ற பிரதமர், விவசாயத்திற்கு அதிகநீர் பயன்படுத்தும் திட்டத்திலிருந்து சொட்டு நீர் பாசன முறையை நோக்கி நாம் மாற வேண்டும் என்றார். தண்ணீரை சேமிக்க உழைப்பது நமது கடமை என்றும் ஒவ்வொரு கிராமமும் தண்ணீரை சேமிப்பதற்கு என சொந்தமாக திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.