தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு திரும்பி செல்வதே சிறந்தது..! ப.ஜ.க விடாப்பிடி..
இந்தியா- தமிழ் நாட்டிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் மீண்டும் தங்கள் சொந் த நாடான இலங்கைக்கு செல்வதே சிறந்தது என பாரதியஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவா்க ளில் ஒருவரான எல்.கணேசன் கூறியிருக்கின்றாா்.
இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் பெருமளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கணேசன் இவ்வாறு கூறியிருப்பதாக இந்தியாவின் தேசிய ஆங்கில தினசரிகளின் ஒன்றான 'த இந்து' செய்தி வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப்
பொறுத்தவரை அவர்கள் மீண்டும் அவர்களது நாட்டிற்குத் திரும்புவதொன்றே தீர்வாக அமையும். அவ்வாறு நாடு திரும்புபவர்களின் வாக்குகள் அங்கு வாழும் தமிழர்களின் நல்வாழ்விற்கும் பெரிதும் உதவும்' என்று கணேசன் குறிப்பிட்டார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சி எந்தவொரு விடயத்தையும் இரகசியமாகச் செய்யவில்லை என்றும் கூறினார்.
இவ்விவகாரத்தில் எவ்விதமான இரகசிய திட்டங்களும் இல்லை. இதுகுறித்து எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளே பொய்யான கருத்துக்களைக்கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
நான் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுதற்கு எதிரானவனல்ல. ஆனால் அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்கள் மீண்டும் இலங்கைக்குச் செல்வதையே விரும்புகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரை
அவர்களது வாக்குகள் மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில் அதுவே மிகச்சிறந்த தீர்வாக அமையும். ஆனால் மீளச்செல்லும்படி அவர்கள் நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்' என்றும் கணேசன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.