இணையத்தில் கோமியத்தை அதிகம் வாங்கும் இந்தியர்கள்!..
இன்றைக்கு குண்டூசி முதல் கனரக வாகனம் வரை அனைத்து பொருட்களையும் இணையம் வழியாகவே வாங்கிவிட முடியும். இந்தியாவில் இணையத்தில் பொருட்கள் வாங்கும் சந்தை ஆண்டுக்கு 15 சதவீதம் அதிகரித்து வருவதாக தொழில் வர்த்தக அமைப்பான அசோசெம்மும் இணைய ஆய்வு நிறுவனமான காம்ஸ்கோரும் தெரிவித்துள்ளன.
மேலும் மாதத்துக்கு 5 கோடியே 34 லட்சம் பேர் இணையத்தில் பொருட்களை பார்வையிடுவதாகவும் இந்நிறுவனங்களின் ஆய்வு தெரிவிக்கிறது. தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
இணையம் மூலம் உணவு பொருட்களும் இந்தியாவில் அதிக அளவு விற்பனையாகிறது. இந்தியாவின் உணவு விற்பனை இணையமான சுவிக்கி என்ற இணையதளம் இந்தியர்களின் உணவு முறை குறித்த அறிக்கையை வெளியிடும். அந்த வகையில் இந்த வருடமும் ஜனவரி தொடங்கி அக்டோபர் வரையிலான தங்கள் நிறுவனம் செயல்படும் 500 நகரங்களில் ஆய்வு செய்து இந்தியர்களின் உணவு முறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரியாணிதான் டாப் லிஸ்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் இந்த ஆண்டில் ஒரு நிமிடத்தில் மட்டும் 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் நொடிக்கு 1.6 பிரியாணி ஆர்டர் வந்ததாகவும் சுவிக்கி தெரிவித்துள்ளது. பிரியாணிதான் 2019 ஆண்டு இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவு என்று சுவிக்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல் புதிதாக சுவிக்கியில் கணக்கு தொடங்கி ஆர்டர் செய்வோரும் முதலில் பிரியாணிதான் ஆர்டர் செய்ததாக தெரிவித்துள்ளது.
பிரியாணிக்கு அடுத்ததாக 128 சதவீதம் அதிகரித்து கிச்சடி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சைவ பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக சைவப்பிரியர்கள் பீட்ஸா சாப்பிடுவதையும், அதன் மேல் சுவைக்காக அதிக சீஸ், வெங்காயம், பனீர், காளான், குடைமிளகாய் போன்றவைதான் தூவ வேண்டிக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக டெசர்ட் வகையில் குலாப் ஜாமுன், பருப்பு அல்வா ஆகியவையும் இந்தியர்கள் சுவைக்கும் இனிப்பு என கூறியுள்ளது. இதில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் ஃபலூடா தான் புது வரவைப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அப்படி மும்பையில் மட்டும் ஐஸ்கிரீம் ஃபலூடா 6000 முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்தவர்கள் 3.5 லட்சத்தைத் தாண்டி உயர்ந்துள்ளனர். குறிப்பாக கேட்டோஜெனிக் டயட் முறைதான் அதிகம் பேர் பின்பற்றி உணவுகளை ஆர்டர் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதில் 306 சதவீதம் கேட்டோ டயட் முறைபடி உணவுளை ஆர்டர் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
வித்தியாசமான கோரிக்கைகளில், குர்கானில் சுவிக்கியின் ஸ்டோரான ஆயுர்வேதக் கடையில் கோமியம் ஆர்டர் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. சுவிக்கி தனது நிறுவனத்தில் டெலிவரி செய்யும் பணியில் 1000 பேர் பெண்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த சுதா என்ற பெண், இந்த ஆண்டு அதிக ஆர்டர்களைக் குவித்தவர் என்றும் அவர் 13 மாதத்தில் மட்டும் 6,838 ஆர்டர்களைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.