சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் விவரங்களை வெளியிட மறுத்த மத்திய நிதி அமைச்சகம்!
இந்தியா, சுவிட்சர்லாந்து நாடுகளிடையே வரி சார்ந்த ஒப்பந்தத்தின்கீழ் தகவல்களை பரிமாறிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை சுவிஸ் அரசு அளித்துள்ளது.
இந்நிலையில், கருப்பு பணம் தொடர்பாக இந்தியாவுடன் சுவிஸ் அரசு பகிர்ந்து கொண்ட விவரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது. இந்த மனுவிற்கு பதில் தர இயலாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆய்வு நடத்திய என்.ஐ.எப்.எம் என்ற நிறுவனம், 1997-2009 வரையிலான காலத்தில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பூஜ்ஜியம் புள்ளி 2 சதவீதம் முதல் ஏழு புள்ளி நான்கு சதவீத தொகை கருப்பு பணமாக பதுக்கப்பட்டிருக்கலாம் என கணித்துள்ளது.
அதேபோல் என்.சி.ஏ.இ.ஆர் அமைப்பு 2011ல் நடத்திய ஆய்வில், 1980 முதல் 2010 வரையான காலத்தில் 38 ஆயிரத்து 400 கோடி டாலர் முதல் 49 ஆயிரம் கோடி டாலர் வரையிலான தொகை, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியிருக்கலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.