இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டார் - ராகுல் கடும் தாக்கு!

ஆசிரியர் - Admin
இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டார் - ராகுல் கடும் தாக்கு!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசியதாவது:- 

மோடியின் நிர்வாகம் அவருக்கு நாட்டை எவ்வாறு பிளவுபடுத்தி வெறுப்பை பரப்புவது என்பது பற்றி கற்றுக்கொடுத்துள்ளது. அந்த நிர்வாகம் கற்றுக்கொடுத்ததை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். அதை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொண்டனர்.

போராட்டம் நடத்தும் மாணவர்களின் குரலை ஒடுக்குவது ஏன்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காதது ஏன்? நமது நாட்டின் வலிமையாக இருந்த பொருளாதாரத்தை அழித்தது ஏன்? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பதில் அளிக்கவேண்டும். நமது நாட்டின் வலிமையாக உள்ள மக்களின் குரலை ஒடுக்கி, இந்தியபொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தி அதை முற்றிலும் ஒழிக்க நமது எதிரி நாடுகள் தங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்தனர். அந்த எதிரி நாடுகளின் முயற்சிகளை நம் நாட்டு மக்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், எதிரி நாடுகளால் கூட ஒழிக்க முடியாத நமது நாட்டு மக்களின் குரல் மற்றும் பொருளாதாரத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்.

நீதி துறையின் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தை ஒழித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத காரணத்தால் தான் நீங்கள் வெறுப்புக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள். ஆடைகளை பொருத்தமட்டில் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் உங்கள் உடைகளை பெற்றி தெரியும். நீங்கள் தான் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை அணிகிறீர்களே தவிர நாட்டு மக்கள் அல்ல.

இந்து, கிருஸ்தவர், முஸ்லிம், சீக்கியர் என அனைவரது குரலும் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. நீங்கள் அதை தாக்க முடியாது. அப்படி நீங்கள் தாக்க முயற்சித்தால் இந்தியா உங்களை தடுத்துவிடும். நாங்கள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை தாக்கி, பாரத மாதாவின் குரலை ஒடுக்க இந்த நாடு அனுமதிக்காது. இது காங்கிரஸ் கட்சிக்கான 'சத்தியாகிரகம்’ போராட்டமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான சத்தியாகிரம்’ இவ்வாறு அவர் கூறினார்.