SuperTopAds

ஆஸ்திரேலியா: அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்றச் சட்டம் நீக்கம்

ஆசிரியர் - Admin
ஆஸ்திரேலியா: அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்றச் சட்டம் நீக்கம்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகள், ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற அனுமதிக்கும் மருத்துவ வெளியேற்றச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், ‘தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது’ என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் விமர்சித்து வந்தார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய மேலவையில் சுதந்திர மேலவை உறுப்பினரான ஜாக்யூ லேம்பியின் ஆதரவை பெற்றதன் மூலம் இச்சட்டத்தை நீக்குவதில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியாவை ஆளும் லிபரல் கூட்டணி அரசு.  கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக வந்தடையும் அகதிகளை நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைத்துள்ளது. 

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் இடையே மனநல மற்றும் உடல்நலப்பாதிப்பு பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சை தேவைப்படும் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான சட்டத்தை எதிர்க்கட்சிகளான லேபர் கட்சி மற்றும் பசுமைக் கட்சி முன்நின்று நிறைவேற்றியது. 

அப்போது, இச்சட்ட மசோதாவை தடுப்பதற்கான பெரும்பான்மை பலம் ஆளும் லிபரல் கூட்டணி அரசிடம் போதுமானதாக இல்லாததால் அகதிகளுக்கான ஆதரவான இச்சட்டம் நிறைவேறியது. இந்த சூழலில், கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ஆளும் லிபரல் கூட்டணி அரசு அமோக வெற்றி பெற்றது முதல் இச்சட்டத்தை நீக்க பிரதமர் ஸ்காட் மாரிசன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலிய மேலவையில் முயன்ற ஆளும் லிபரல் கூட்டணி அரசு அச்சட்டத்தை நீக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. 

“நலிந்த மக்களுக்கான சிகிச்சை இதன் மூலம் தடுக்கப்படும்,” என விமர்சித்திருக்கிறார் லேபர் கட்சியின் மேலவை உறுப்பினரான கிறிஸ்டினா கெனேஅலே. 

இச்சட்ட நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர மேலவை உறுப்பினரான  ஜாக்யூ லேம்பி எந்த சமரசத்தின் அடிப்படையில் ஆளும் லிபரல் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது ரகசியமாகவே உள்ளது. இந்த சொல்லப்படாத ரகசியம் குறித்து பல விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

“மருத்துவ வெளியேற்றச்சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்களுக்கு இது கறுப்பு நாள்,” எனக் கூறியுள்ளார் பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் நிக் மெக்கிம்.