அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகல்!
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் எம்.பி. விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியும் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது.
சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானவர். கலிபோர்னியா மாகாணத்தில் அரசு வக்கீலாக பதவி வகித்த கமலா ஹாரிஸ், ஜனாதிபதி டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரானவர்.
எனவே, அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவதாக இந்திய கமலா ஹாரிஸ் இவ்வாண்டின் தொடக்கத்தில் அறிவித்தார். அதற்காக நிதி திரட்டலிலும் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். ஜூலை மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் திடீரென அறிவித்துள்ளார்.
‘எனது ஆதரவாளர்களுக்கு நன்றியையும் அதே நேரத்தில் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிரசாரத்தையும் இன்று நிறுத்துகிறேன். ஆனால் ஒரு விஷயம் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன், இந்த பிரசாரம் எதை நோக்கி உள்ளதோ அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பதிவிட்டார்.
‘நான் கோடீஸ்வரி அல்ல. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமையால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன்’ என கமலா ஹாரிஸ் தனது திடீர் அறிவிப்பு குறித்து மற்றொரு வலைத்தளத்தில் தெரிவித்தார்.