உறுதி செய்யப்பட்டது விடுதலைப்புலிகள் மீதான தடை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. பின்னர் இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2014-ம் ஆண்டில் மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. இந்த தடை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
பின்னர் இந்த தடை தொடர வேண்டுமா? என்பதை ஆய்வு செய்வதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கிதா திங்ரா சேகல் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றையும் அமைத்தது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து மேற்படி தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆஜராகி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய தீர்ப்பாயம், விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்துள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்த தடையை உறுதி செய்து தீர்ப்பாயம் தனது உத்தரவில், ‘தங்கள் தாய் நிலத்துக்கு விடுதலை பெற்றுத்தருவதும், ஒரு சுதந்திரமான, இறையாண்மையுடன் கூடிய சோசலிஷ தமிழ்நாட்டை உருவாக்குவதுமே விடுதலைப்புலிகளின் முக்கிய நோக்கமாகும். அதை தற்போதும் முக்கிய இலக்காக கொண்டிருப்பதுடன், அதற்காக கடந்த 5 ஆண்டுகளில் விடுதலைப்புலிகளும், அதனுடன் தொடர்புடைய குழுக்களும் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளனர்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும், தமிழகமும் அளித்துள்ள ஆதாரங்களின்படி, கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும், மத்திய அரசுக்கு கெடுதல் விளைவுக்கும் நோக்கில் பல்வேறு சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளதாக தீர்ப்பாய நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.