SuperTopAds

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியால் ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது?

ஆசிரியர் - Admin
ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியால் ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது?

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமின் அகதியும் ஊடகவியலாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி, ஆஸ்திரேலியாவுக்குள் ஒருபோதும் நுழைய முடியாது எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

“நியூசிலாந்துக்கு வரும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூ சிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் குடியேற்றத்துறை அமைச்சரின் பிரச்னை. இதற்கு நான் கருத்து தெரிவிக்க வேண்டிய தேவையில்லை,” எனக் கூறிய பீட்டர் டட்டனிம் நியூசிலாந்தில் அகதி பூச்சானிக்கு தஞ்சம் வழங்கப்பட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார். அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்,” எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை No Friend But The Mountains என்ற நூலாக எழுதியுள்ளார் அகதி பூச்சானி. இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்ற பூச்சானி மீண்டும் மனுஸ்தீவுக்கு இனி திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

மனுஸ் தீவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த குர்திஷ் ஊடகவியலாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி, நவம்பர் 29 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவில் கலந்துகொள்வதற்காக விருந்தினர் விசாவில் நியூசிலாந்துக்கு சென்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வரும் பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் உள்ள அகதிகளில் ஆண்டுதோறும் 150 அகதிகளை தங்கள் நாட்டில் மீள்குடியமர்த்துகிறோம் என கடந்த 6 ஆண்டுகளாக நியூசிலாந்து அரசு கூறி வருகின்ற நிலையில், அதை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.