2 பேருக்கு ஒரே வங்கிக்கணக்கு எண்: வங்கியின் கவனக்குறைவால் ரூ.89 ஆயிரத்தை இழந்த நபர்!

ஆசிரியர் - Admin
2 பேருக்கு ஒரே வங்கிக்கணக்கு எண்: வங்கியின் கவனக்குறைவால் ரூ.89 ஆயிரத்தை இழந்த நபர்!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் மொத்தம் 24 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தில் உள்ள ஆலம்பூர் நகரின் ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா கிளையில் ஒரே வங்கிக்கணக்கு எண்ணை இரு நபர்களுக்கு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ருராய் மற்றும் ரவுனி பகுதிகளைச் சேர்ந்த ஹுகும் சிங் என்ற பெயருடைய இரு நபர்களுக்கு ஒரே வங்கிக்கணக்கு எண்ணை இந்த கிளை வங்கி அளித்தது. ருராய் பகுதியை சேர்ந்த ஹூகும் சிங் 2016ம் ஆண்டு இந்த வங்கியில் கணக்கை திறந்தார். தனது வங்கிக்கணக்கில் நிலம் வாங்குவதற்காக பணம் செலுத்தி சேமித்து வந்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 16 ம் தேதி பண இருப்பை சரிபார்த்த போது தனது கணக்கிலிருந்து ரூ.89 ஆயிரம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வங்கியை அணுகி விசாரித்தார். ஊழியரின் கவனக்குறைவு காரணமாக ரவுனி பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங் என்பவருக்கு இதே வங்கிக்கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஒரு ஆண்டாக ருராய் பகுதியை சேர்ந்த ஹுகும் சிங் செலுத்திய ரூபாயை எடுத்துள்ளார். இது குறித்து விசாரிக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பணத்தை எடுத்த ஹுகும் சிங் கூறுகையில், ‘இது முற்றிலும் வங்கியின் கவனக்குறைவு. எனது கணக்கில் பிரதமர் மோடி பணம் செலுத்துகிறார் என நினைத்து நான் எடுத்தேன்’ என கூறினார். பணம் செலுத்திய ருராய் பகுதியைச் சேர்ந்த ஹுகும் சிங் இது தொடர்பாக பலமுறை வங்கிக்கு சென்றும் தனது பணம் இன்னும் திரும்ப கிடைக்கவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.