மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்கள்!

ஆசிரியர் - Admin
மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்கள்!

திருச்சி அருகே பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடியதையும், அந்த வழக்கை விசாரித்த மன்னன் சாலமன், அந்த குழந்தையின் தாயை கண்டறிந்து, குழந்தையை ஒப்படைத்து நீதி வழங்கியதையும் பற்றி படித்திருப்போம். ஆனால் அதேபோன்று ஒரு குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாய்லர் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், பாய்லர் ஆலை வளாகத்தில் பொது மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருபவர் வினோத். இவருடைய மனைவி அகிலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அகிலாவை பிரசவத்திற்காக பாய்லர் ஆலை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 11-ந் திகதி ஆண் குழந்தை பிறந்தது. 

இதேபோல் அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, பாய்லர் ஆலை ஊழியர் பாலகுமாரனின் மனைவி சங்கீதாவுக்கு கடந்த 12-ந் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் அகிலாவிற்கும், சங்கீதாவிற்கும் அருகருகே படுக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

நேற்று காலை அவர்கள் 2 பேரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் காலை பணிக்கு வந்த ஒப்பந்த செவிலியர்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு தூக்கிச்சென்றுள்ளனர். குளிப்பாட்டிய பின்னர் குழந்தைகளை கொண்டு வந்து, தாய்மார்களின் அருகில் படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில் தூங்கி எழுந்த தாய்மார்கள் 2 பேரும், தங்கள் அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு பாலூட்டி உள்ளனர். அப்போது ஒரு குழந்தை தாய்ப்பால் அருந்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய், ‘இது என் குழந்தை இல்லை’ என்று கூச்சலிட்டுள்ளார். 

மேலும் குழந்தை மாறியுள்ளதாக கூறி, கதறி அழுததோடு, அருகில் உள்ள படுக்கையில் இருப்பதுதான் தன் குழந்தை என்றும் கூறியுள்ளார். ஆனால் அருகில் படுக்கையில் இருந்த தாய், தன்னுடைய படுக்கையில் இருந்தது தனது குழந்தைதான் என்று கூறியுள்ளார். இதனால் 2 தாய்களும் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் மற்றும் பாய்லர் ஆலை தலைமை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 2 குழந்தைகளுக்கும் ரத்த பரிசோதனை மற்றும் எடை அளவு கண்டறியப்பட்டது. ஆனால் 2 குழந்தைகளுக்கும் ஒரே வகையான ரத்தம் இருப்பதாகவும், மேலும் எடையும் ஒரே அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 தாய்களுக்கு உரிய குழந்தைகளை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் தமிழக சுகாதாரத்துறையிடம், பாய்லர் ஆலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில், குழந்தைகளின் ரத்த வகை மற்றும் மரபணுவை சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்த பின்னரே, 2 குழந்தைகளில் எந்த குழந்தை யாருடையது என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, குழந்தைகளை குளிப்பாட்டிய ஒப்பந்த செவிலியர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம். இந்த மருத்துவமனையில் பாய்லர் ஆலை நிறுவன செவிலியர்கள் 4 பேர் மட்டுமே உள்ளனர். மற்ற அனைவருமே ஒப்பந்த ஊழியர்கள் தான்.

இந்த மருத்துவமனைக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் பணியில் உள்ள ஊழியர்கள் என சுமார் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாய்லர் ஆலை வைத்தியர்கள்  50 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், என்று கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு