தொடர் சர்ச்சைக்குள்ளான 'பத்மாவதி' திரைப்படம்: வெளியீட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருந்த ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியீட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர். இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தைத் வெளியிட தடை கோரி, 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.
ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப் பாடல் இருப்பதாக வதந்தி உருவானது. இதை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி முற்றிலுமாக மறுத்தார். ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார்.
இதை கர்னி சேனா அமைப்பு ஏற்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மக்ரனா, ''பத்மாவதி படத்தின் பெண் கதாபாத்திரங்களின் கண்ணியத்தை காக்கவே போராடுறோம். ராஜபுத்திர வம்ச வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது. அதனை கறுப்பு மையால் அழிக்கவிட மாட்டோம். பொதுவாக நாங்கள் பெண்களுக்கு எதிராக கை உயர்த்துவது இல்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்தது போல தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம்'' என்றார்.
இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருவதால் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருந்த பத்மாவதி திரைப்படம் வெளியீட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.