SuperTopAds

மனுஸ், நவுறு தீவுகளில் உள்ள அகதிகளை கனடாவில் குடியமர்த்த புதிய முயற்சி!

ஆசிரியர் - Admin
மனுஸ், நவுறு தீவுகளில் உள்ள அகதிகளை கனடாவில் குடியமர்த்த புதிய முயற்சி!

மனுஸ் தீவு மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அவுஸ்ரேலிய அரசு தொடர்ந்தும் மறுத்து வருவதை அடுத்து- தனிநபர்களின் ஊடாக ஸ்பொன்ஸர் செய்வதன் மூலம் கனடாவில் இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ளும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டு ஈரானிய அகதிகள் இந்த ஸ்பொன்ஸர் திட்டத்தின் கீழ் கனடா சென்றடைந்துள்ளனர். இன்னொரு ஈரானிய அகதி அடுத்தவாரம் மனுஸ் தீவிலிருந்து கனடா செல்லவுள்ளார்.

மனுஸ் - நவுறு தீவிலுள்ள அகதிகள் அவுஸ்ரேலிய அரசினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்று லிபரல் கூட்டணி அரசினால் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அங்குள்ள அகதிகளை கனடாவில் வாழ்பவர்கள் தனித்தனியாக ஸ்பொன்ஸர் செய்து தஞ்சக் கோரிக்கையாளர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கனடிய குடிவரவு வாய்ப்பு நிலைகளை கண்டறிந்த அவுஸ்ரேலிய பின்னணி கொண்ட அகதிகள் செயற்பாட்டாளர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இதன் அடிப்படையில், ஒரு அகதியை கனடாவுக்கு ஸ்பொன்ஸர் செய்வதற்கு அவருக்கான வாழ்வாதார செலவாக 18 ஆயிரம் டொலர்களை வங்கியில் வைப்பு செய்து கனடிய குடிவரவு திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தினால், குறிப்பிட்ட அகதிக்கு தற்காலிக வதிவிட உரிமை வழங்கி அவரின் தஞ்சக்கோரிக்கையை கனடா பரிசீலிக்கும்.

இதன்பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது படிப்படியாக வெற்றியடைந்து வருகிறது. கனடாவிலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று முதற்கட்டமாக 17 அவுஸ்ரேலிய அகதிகளுக்கான விண்ணப்பங்களை தயார் செய்து கனடிய குடிவரவு திணைக்களத்திடம் சமர்ப்பிப்பதற்கு தேவையான மூன்று லட்சத்து 30 ஆயிரம் டொலர் ஸ்பொன்ஸர் பணத்தை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை, சமாந்தரமாக இன்னும் 200 அகதிகளை இவ்வாறான ஒரு திட்டத்தின் வழியாக கனடாவில் மீளக்குடியமர்த்துவதற்கான ஸ்பொன்ஸர் பணத்தை திரட்டும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.