பாக்தாதியை கொல்ல உளவாளியாக செயல்பட்டவருக்கு ரூ.175 கோடி பரிசு!
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்க வீரர்கள் முற்றுகையிட உளவு தகவல்களை தந்து உதவிய நபருக்கு இரண்டரை கோடி டாலர் பரிசு கிடைக்கவுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதியை கொல்வதற்கு நீண்ட காலமாகவே அமெரிக்கா குறி வைத்திருந்தது.
இந்த நிலையில்தான் அவர் சிரியாவின் வடமேற்கு நகரமான இட்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வளாகத்தின் சுரங்கத்துக்குள் பதுங்கி இருப்பதை ஒருவர் அளித்த ரகசிய தகவல் மூலம் அமெரிக்கா அறிந்தது.
பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
அமெரிக்காவின் கையில் சிக்கித்தவிப்பதை விட தன்னைத்தானே பலியிடுவது மேல் என முடிவுசெய்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பாக்தாதி வெடிக்க வைத்து, உடல் சிதறி உயிரிழந்தான்.
இதில் பாக்தாதி மற்றும் அவனது 3 குழந்தைகளும் பலியாகினர். இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் அறிவித்தார்.
பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
இந்நிலையில், அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்க வீரர்கள் முற்றுகையிடுவதற்கு உதவியாக உளவு தகவல்களை தந்து உதவிய நபருக்கு இரண்டரை கோடி டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 175 கோடி ரூபாட்) பரிசாக கிடைக்கவுள்ளது. இதை அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் உறுதிப்படுத்தி உள்ளது.
அமெரிக்க அரசு சார்பில் பாக்தாதியின் தலைக்கு இரண்டரை கோடி டாலர் விலையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பாக்தாதி தங்கி இருந்த ரகசிய மறைவிடத்தின் முகவரி, சுரங்கத்தின் வரைபடம் உள்ளிட்ட விபரங்களை குர்திஷ் படையினர் மூலம் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டோ பிரிவு அதிகாரிகளுக்கு தந்து உதவிய அந்த உளவாளி, இந்த தாக்குதலுக்காக அமெரிக்க படையினர் கடந்த 26-ம் தேதி நள்ளிரவில் ஹெலிகாப்டர் மூலம் அங்கு ரகசியமாக வந்து இறங்கியபோது அதே இடத்தில் இருந்ததாக அராபிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும், அந்த உளவாளி எந்த நாட்டை சேர்ந்தவர்? என்ற தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பாக்தாதி கொல்லப்பட்ட பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவரும் குடும்பத்தாரும் தங்களது வசிப்பிடத்தில் இருந்து பாதுகாப்பாக வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தனது உறவினர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதற்காக பாக்தாதியின் நடமாட்டத்தை மோப்பம் பிடித்த அந்நபர் இந்த ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு தெரிவித்ததாக இட்லிப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகின்றது.
எது எப்படியோ.., பாக்தாதியின் இருப்பிடத்தை ஒற்றை ஆள்காட்டி விரலால் அடையாளம் காட்டிய அந்த உளவாளிக்கு கைநிறைய பணமாக இரண்டரை கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தாலும், அவரது வாழ்க்கை என்னவோ ‘நித்திய கண்டம் - பூரண ஆயுசு’ என்னும்படித்தான் இருக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.