ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாளின் வியத்தகு அற்புதம்: ஓர் விசேட நேரடி அனுபவம் (VIDEO)

ஆசிரியர் - Admin
ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாளின் வியத்தகு அற்புதம்: ஓர் விசேட நேரடி அனுபவம் (VIDEO)

யாழ். ஏழாலை தெற்கு வசந்தபுரம் களபாவோடை வசந்தநாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(22) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் அம்பாள் ஆலயத்தைத் தரிசித்து உயர்வடைந்தோர் பலர். நோய் தீர்ந்து சுகம் பெற்றோர் இன்னும் பலர் .அம்பாளின் அற்புதங்களையும், மகிமைகளையும் வார்த்தைகளால் வடிக்க வாழ்நாள் போதாது.

"கற்பக வல்லியின் பொற்பதம் பணிந்தே நற் கதியருள்வாயம்மா..."என ஆரம்பிக்கும் பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற இணுவிலூர் பிரபல சங்கீதக் கலைஞர் மஹா வித்துவான் பிரம்ம ஸ்ரீ ந. வீரமணி ஐயாவின் வாழ்க்கையில் நடந்த சொல்லொணாத் துயரத்திற்கு எல்லாம் வல்ல களபாவோடை அம்பாளின் திருவருட் கருணையினால் தீர்வு கிடைத்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?


அவர் வாழ்ந்த சமகாலத்தில் அவருடைய நெருங்கிய நண்பராக வாழ்ந்து தற்போதும் என் போன்ற பலருக்கும் வழிகாட்டியாக விளங்கி வரும் யாழ். ஏழாலையைச் சேர்ந்த மூத்த ஓதுவார் 'கலைமாமணி' க. ந.பாலசுப்பிரமணியம் சந்தித்த நேரடி அனுபவமிது. ஆகையால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இணையத்தளச் செய்திச் சேவைக்கு விசேடமாக அவர் வழங்கிய விசேட கருத்துப் பகிர்வு வருமாறு,

மஹா வித்துவான் பிரம்ம ஸ்ரீ ந. வீரமணி ஐயாவின் நெருங்கிய நண்பராக நான் இருந்துள்ளேன். அவர் எவ்வாறான வேலைப்பளுவின் மத்தியிலிருந்தாலும் எந்த வேளையிலும் என்னால் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கானதொரு சூழலிருந்தது.

(மஹா வித்துவான் பிரம்ம ஸ்ரீ ந. வீரமணி ஐயா)

கடந்த-1987 ஆம் ஆண்டில் ஒரு தடவை எனது நாளாந்தக் கடமைகளை முடித்துவிட்டு இரவு-09.30 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற போது திடீரென என்னைக் கட்டிப் பிடித்து அவர் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். ஏனய்யா இப்படி அழுகிறீர்கள்? எனக் கேட்ட போது "டேய் வந்து பாரடா என்ர மனைவியை" என என்னை வீட்டு அறையினுள் அழைத்துச் சென்று காட்டினார்.

அங்கே படுத்த படுக்கையாக, பார்ப்பதற்கே மிகவும் கஸ்ரமானதொரு நிலையில் அவருடைய மனைவி காணப்பட்ட நிலை கண்டு நான் மிகவும் மனம் வருந்தினேன். அவா பாஷிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், ஒரு கையும், ஒரு காலும் செயற்பட முடியாத நிலை. அந்தத் துயரமான காட்சியை நான் கண்ணுற்றுக் கொண்டிருந்த போது வீரமணி ஐயா எனக்கு எதிரே நின்று வேதனை தாளாமல் கத்தி அழத் தொடங்கினார்.

அச்சந்தர்ப்பத்தில் நான் அவரைச் சாந்தப்படுத்தி ஆறுதல் கூறினேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது "டேய் நீ என்ன செய்தாலும் பரவாயில்லை...என்ரா மனைவி சுகமாக வேண்டும். இல்லாவிடில் நான் சாக வேண்டும் எனக் கூறினார்.

அப்போது உடனடியாக எனக்கு களபாவோடை அம்பாளின் ஞாபகமே வந்தது. இது தொடர்பில் நான் வீரமணி ஐயாவிற்கு எடுத்துச் சொன்ன போது நீ எப்போது வர வேண்டும் என்று சொல்...நான் மனைவியை அழைத்து வரத் தயாராகவிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

நான் அக்காலத்திலேயே அம்பாள் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தேன். அக்காலத்தில் இவ்வாலயத்தில் வாக்குச் சொல்லும் அம்மா 16 வயதுக்கும், 17 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவராகக் காணப்பட்டார். அவாவுக்கு ஆறரை வயதிலிருந்தே அம்மன் அருள் காணப்பட்ட நிலையில் 16 வயதில் அமமன் அருள் நிறைந்து வழிந்து காணப்பட்டது.

இந்நிலையில் அவருடைய வீட்டிற்கு நேரடியாகச் சென்ற நான் அம்மாவிடம் வீரமணி ஐயாவின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை எடுத்துக் கூறி என்னம்மா செய்யலாம் ? எனக் கேட்ட போது 'பூசை இடம்பெறும் போது கூட்டிக் கொண்டு ஆலயத்துக்கு வாருங்கள்.... அங்கே பார்க்கலாம்....என்றார்.

இந்த விடயத்தை வீரமணி ஐயாவிடம் எடுத்துச் சொன்ன போது அவரும் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவித்து புனிதமானதொரு வெள்ளிக்கிழமை நாளில் காரிலே தன்னுடைய மனைவியை ஏழாலை களபாவோடை அம்பாள் ஆலயத்திற்கு அழைத்து வந்தார். ஆலயத்தில் நான்கு பேர் சேர்ந்து அவாவைத் தூக்கிச் சென்று ஆலய மண்டபத்தில் படுத்தினோம். அப்போது அம்மா வருகை தந்து நோயால் கடுமையாகப் பாதிப்புற்றிருந்த வீரமணி ஐயாவின் மனைவியின் உடலுக்கு விபூதி போட்டு உச்சாடனம் மேற்கொண்டு வேப்பிலையால் ஆசிர்வாதம் வழங்கினார்.

இதன் பின்னர் அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் அழைத்து வாருங்கள். அப்போது அவாவின் பிணி சிறிது குணமடைந்த நிலையிலிருக்குமெனவும் கூறினார்.

இதன்படியே வீரமணி ஐயா மீண்டும் தன்னுடைய மனைவியை காரில் ஆலயத்திற்கு அழைத்து வந்தார். அந்த நாளில் அம்மா விபூதி போட்டு மீளவும் வேப்பிலையால் உடல் முழுவதும் தடவி ஆசிர்வாதம் வழங்கினார். இரண்டாவது தடவை அழைத்து வரும் போது அம்மா முதற்கூறியது போன்று அவா சிறிது குணமடைந்த நிலையிலிருந்தார். இந்நிலையில் இரண்டாவது தடவையின் போது அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் அழைத்து வாருங்கள். அப்போது அவா உங்கள் மோட்டார்ச் சைக்கிளிலேயே இருந்து வருவா என அம்மா வீரமணி ஐயாவிடம் கூறினார்.

அம்மா கூறியது போன்று மூன்றாவது வார வெள்ளிக்கிழமை ஒருவரின் உதவியுடன்  மோட்டார்ச் சைக்கிளில் வீரமணி ஐயாவின் அம்மா ஆலயத்திற்கு வருகை தந்தார். இதன் போது நானகாவது தடவை அவா...எந்தவொரு உதவியுமில்லாமல் ஆலயத்திற்கு வருகை தருவா என அருள் வாக்கு வழங்கினார். அம்மா கூறியதற்கமைய நான்காவது வார் வெள்ளிக்கிழமை காரில் ஆலயத்திற்கு மனைவியை வீரமணி ஐயா காரில் அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வீதியிலிருந்து எந்தவொரு உதவியுமின்றித் தானாக நடந்து வந்து அம்பாளைப் பக்திபூர்வமாகத் தரிசித்ததுடன் மனமுருகத் தன்னைச் சுகப்படுத்திய அம்மாவின் காலில் விழுந்து வணங்கினார். 

இதன் போது வீரமணி ஐயா என்னை நோக்கி டேய்...நான் என்னடா அம்பாளுக்குச் செய்ய வேண்டுமெனக் கேட்டார். அதற்கு நீங்கள் அம்பாள் மீது ஒரு ஊஞ்சற் பாட்டு இயற்றிப் பாட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். இதற்கமைய அம்பாளைத் தனது உள்ளத்தில் இருத்தி ஊஞ்சற் பாடலொன்றையும், அந்தாதிப் பாடலொன்றையும் பாடினார்.

அவர் அம்பாள் மீது பாடிய 27 பாடல்களை உள்ளடக்கிய அந்தாதிப் பாடல் ஆகியவற்றின் மூலப் பிரதி அவருடைய கையெழுத்துடன் இன்றும் என்னிடத்திருக்கிறது. அவர் இயற்றிய ஊஞ்சற் பாடல் மற்றும் அந்தாதிப் பாடல் என்பன இசையுடன் கூடியதாக ஒலிநாடாவில் பதிவு செய்து  வீரமணி ஐயா அம்மனிடம் கையளித்தார். அதன் பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வீரமணி ஐயா நேரடியாக வருகை தந்து மஹோற்சவ காலத்தில் அம்பாளின் ஊஞ்சற் பாடலைப் பண்ணுடன் ஓதுவதற்கு நான் ஏற்பாடு செய்தேன் என்றார்.

இதேவேளை, அம்பாளின் அற்புதங்கள் மற்றும் சிறப்புக்கள் தொடர்பில் அவர்  எமது செய்திச் சேவைக்கு வழங்கிய மேலதிக கருத்துக்களை மேலுள்ள காணொளி இணைப்பில் காணலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு