மோடியின் சாதனைகளை முதுகின் மீது ஓவியமாக வரைந்து கொண்ட பெண்கள்!
குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி விழாவையொட்டி, பெண்கள் சிலர் மோடி அரசின் சாதனைகளை முதுகின் மீது ஓவியமாக வரைந்து கொண்டனர். வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியுள்ளது.
இதையொட்டி கோவில்களிலும் வீடுகளிலும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி பெண்கள் சிலர் வண்ண ஓவியங்களை தங்கள் முதுகின் மீது வரைந்து கொண்டனர்.
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக அவர்கள் ஓவியங்களை வரைந்திருந்தனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை குறிக்கும் விதமாகவும், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதை குறிப்பிடும் வகையிலும் ஓவியங்களை தீட்டியிருந்தனர். மேலும் சந்திராயன் - 2 திட்டத்தின் சாதனையை போற்றும் வகையிலும் ஓவியம் வரையப்பட்டிருந்தது.